Tuesday, December 24, 2013

நான் எழுதும் பதிவினை எப்படி எல்லாம் பலபேர் சிந்திப்பார்கள் என்று யோசித்தேன் அதனாலே ஒரு அவியல், குவியல்.

நம் நினைப்பே அவியல் ஒரு குவியல் - இது ஒரு அவியல், குவியல்

எங்கே போனாலும் நமக்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன.
இப்படியா, அப்படியா, இதுவா, அதுவா என்றே பல நேரம்
குழம்புகிறோம். நம்மைச் சுற்றியுள்ளோரையும் குழப்பத்தில்
ஆழ்த்துகிறோம். எதுவுமே துவக்கத்திலேயே முடிவெடுக்க இயலாத நிலை. எதையுமே முழுமையாக நம்பி இதுதான் சரி, நமக்குத் தகுந்தது என்று முடிவெடுக்க முடியவில்லை.

ஏதோ ஒன்று வாங்கவேண்டுமெனக் கிளம்பி, ஏதோ கண்களில் பட,
ஏதோ ஒன்று வாங்கி அதையும் அடுத்த நாள் மாற்றி இன்னொன்று
வாங்கி அதிலும் திருப்தி அடையாமல் இருக்கிறோம். பல தருணங்களில் நாம் நம்பிக்கை வைத்தது தவறாகப்போய்விட்டதே என்றும் வருந்துகிறோம். என்னவோ ! நான் நினைச்சதே வேற ! நடந்ததே வேற என வருத்தப்படுவோர் பலர்.

ஏதோ படிக்கவேண்டும், ஏதோ வேலைக்கு போகவேண்டும், ஏதோ
ஒருவனை (ளை) த்திருமணம் செய்யவேண்டும், என பல ஏதோக்களில்
தமது வாழ்க்கையை நடத்துபவர் பலர் தமது வாழ்வின் மத்தியிலோ
அல்லது மாலையிலோ தமைத்தாமே நொந்தும் கொள்கிறார்க்ள்.
இவற்றிற்குக் காரணம் கூறப்போனால் ஒன்று இவர்களுக்கு என்ன‌
வேண்டுமென்பதிலே இருக்கும் தெளிவின்மை.

இரண்டாவது எது வேண்டுமோ அது பற்றிய விவரங்கள், விளக்கங்கள்
இலாத நிலை. ஆகா ! இவர் சொல்லிவிட்டார் சரியாகத்தான் இருக்கும் .
அவர் வாங்கியிருக்கிறார். நன்றாகத்தான் இருக்கும். என்று பல விஷயங்களில் பலரை நம்பி பின் ஏமாற்றம் அடைகிறோம்.
நாம் எதை நம்பவேண்டும் எதை நம்பிவிடக்கூடாது என்பதில் போதுமான‌ தேர்ச்சி நமக்கில்லை எனவே தோன்றுகிறது.

"தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயறவும்,
தீரா இடும்பை தரும் " என்பார் வள்ளுவர்.

(ஆராயாமல் ஒருவரை (ஒரு கருத்தை) நம்புதலும், ஆராந்தபின், எதை நம்பிச் செயல்படத்துவங்கிவிட்டோமோ, அதன்பால், சந்தேகக்கண்களுடனேயே இருப்பதும்
முடிவிலா துன்பத்தைத் தரும்)

" ஒல்வது, அறிவது அறிந்து அதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல் " என்றும் சொல்கிறார் வள்ளுவர்.

ஒரு காரியம் நம்மால் முடியுமா ? அதில் அறியவேண்டியது எல்லாம் அறிந்து விட்டோமா என்று எண்ணாமலேயே பல காரியங்களை நடுவிலே கொண்டு வந்து நிறுத்திய நிலையில் குழப்பத்துடன் நிற்கும் மத்திய தர பிரிவினர் ஏராளம்.

நமது பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உலகத்து அன்றாட வாழ்க்கையிலே நமது தெளிவின்மையும் ஆராயாத நம்பிக்கையும் மட்டுமே முதற் காரணங்கள்.

நேரமில்லை. ஏதோ நடப்போம். செய்வோம். எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்பவரும் பலர்.

சஞ்சலம், குழப்பத்தின் மூல காரணமே indecision.

ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று ஆன்மீகப்பக்கம் திரும்பினால்
அங்கும் ஏகப்பட்ட குரல்கள். எது சரி ? எதை நம்புவது ? தோத்திரங்கள்,
சாத்திரங்கள், ஜாதகங்கள், பரிகாரங்கள், பல்வேறு புண்ய ஸ்தலங்கள்,
அங்கே ( நமது கர்ம வினைகளை நீக்குவதாகச் சொல்லப்படும்)
நீத்தார் கடன் முடித்தல், நாம் முத்தி பெற செய்யவேண்டிய கருமங்கள்,
ஹோமங்கள், பலவித தானங்கள். இவையெல்லாம் அவ்வளவு வேண்டாம், ஏதோ நம் வீட்டில் இருந்துகொண்டே இறை பக்தி செய்தால் மட்டும் போதும் என்று நினைத்தாலும், அங்கு பற்பல திசைகளிலிருந்து பற்பல பரிந்துரைகள்.

இதுவா அதுவா என்று புரியாத‌ நிலையில் இரண்டையுமே ஒழிந்து நிற்பவர் ஏராளம். எதற்கு வம்பு, என‌ இரண்டையுமே கடைப்பிடிப்பர் சிலர். சிவனா, பெருமாளா ? அம்பாளா, தாயாரா ? வினாயகனா , விச்வ்க்சேனரா ? தமிழா வட மொழியா ? தெய்வம் பார்த்து இருப்பது கிழக்கா, வடக்கா, தெற்கா, மேற்கா ? எந்தக் கடவுள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் !! எந்தத் திதியில் ? பிள்ளையாரா சதுர்த்தியில் . முருகன் சட்டியில்., சிவன் பிரதோஷத்தன்று. எந்தக் கடவுளுக்கு எந்தக் கிழமையில் அர்ச்சனை செய்வது நல்லது ?
சனி பகவானுக்கு சனிக்கிழமை. அங்காரகனுக்கு செவ்வாய்
தக்ஷிணாமூர்த்திக்கு வியாழன். அம்பாளுக்கு வெள்ளி.
அனுமனுக்கும் சனிக்கிழமை விசேடம். முருகனுக்கும் வியாழன் விசேடம்.

போதாக்குறைக்கு சூரிய மண்டலத்திலே சாயா க்ருஹமாம், ராகு கேது.
எல்லா க்ருஹங்களும் க்ளாக் வைஸ். ராகு கேது மட்டும் ஆன்டி க்ளாக்‍ வைஸ் ராகுகாலத்தில் சனிக்கிழமையன்று அதை எதிர்பக்கம் சுற்றணும்னு எங்க வீட்டு ஜோசியர் சொல்றாரே?

எங்க சாமிக்கு என்ன பூ ? அரளியா,வில்வமா, துளசியா ? அனுமாருக்கு என்ன போடவேண்டும் ? வெண்ணையா ? வெற்றிலையா இல்லை வெற்று பேப்பரையே மடித்து ராமா ராமா என எழுதி அதை மாலையாக்கலாமா ?

நாம் வழிபடும் கடவுளுக்குப்பிடித்தது வடையா ? பாயசமா,
கொழுக்கட்டையா, நிலக்கடலை சுண்டலா ?

" எதுவுமே இல்லை. நமக்கு எது பிடிக்குமோ சாப்பிடுகிறோமோ அதையே ஆண்டவனுக்கும் அர்ப்பித்துவிட்டு நாம் உண்ணலாம். தவறே இல்லை."

இது அத்வைத வ்யாக்யானம் அப்படின்னு வேற பக்கத்து வீட்டு வேத வித்தகர் சொல்கிறார்.

இவர்கள் போடும் வாதப் பிரதிவாதங்கள் எல்லாமே சரியென்று தோன்றினாலும், இந்த‌ வாதங்கள் முடிவதற்கு முன்னாடியே நாம் முடிந்து போய் விடுவோம் போல் இருக்கிறதே ! என்று நினைத்தேன்.

எதிர்வீட்டு நண்பர் சொல்வார்: இது கலியுகம். மந்திரம், தந்திரம் எதுவுமே வேண்டாம் ராம ராம என்று இறைவனை இதயத்தில் நிறுத்தி ஜபம் செய்யுங்கள் அது போதும் .

அப்படியா ! சரிதான்! இராமனை விட இராம நாமம் தான் உசத்தி. என்று
கொஞ்ச நேரம் ராம ஜெபம் செய்யப்போனால், பக்கத்து வீட்டிலிருந்து சுதா பாடுகிறார்: " சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் ? சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார் ? "

நான் எனது மனைவியைப் பார்க்கிறேன். " எதற்கு நமக்கு வம்பு ? " நான்
ராம ராமான்னு சொல்றேன். நீங்கள் ஓம் நமசிவாய சொல்லுங்கள். அந்தக்
கடவுளுக்கு நம்மைப்பற்றித் தெரியாதா என்ன ? எல்லாம் அவன் அட்ஜஸ்ட்
பண்ணிக்கொள்வான்' என்று அட்வைஸ் தரும் தரும பத்னி.

இதெல்லாம் எதுவுமே இல்லை. நான் தான் அந்த கடவுள்.
விஷ்ணுவின் அவதாரம். என்று ஊருக்கு ஒரு கடவுள் உயிரோட.

ஏன் இப்படி ஏகப்பட்டது இருக்கே நமது நம்பிக்கைக்குள்ளே என்றால்
அதுதான் நமது மதத்தின் பெருமை. Diversity is the essence of our religion.
அப்படியும் சொல்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர். அரசாங்கத்தில் மிகப்பெரிய பதவியிலிருந்து ஓய்வு
பெற்றவர். மறைகளனைத்தும் ஒருங்கே கற்றவர். கற்று அதற்குத்தக‌
நிற்பவர். அவரிடம் கேட்டேன். "அய்யா ! வள்ளுவர் சொல்கிறாரே !

"யாம்மெய்யாக் கண்டவற்றுள், இல்லை, எனைத் தொன்றும்
வாய்மெயின் நல்ல பிற "

அய்யா ! இவர்கள் சொல்வதில் எல்லாம் எது உண்மை ? "

அவர் கேட்டார் , நீர் தமிழ் கற்றவர் தானே !
சரியென்றும் சொல்லமுடியவில்லை. இல்லை என்றும் சொல்ல "தான்" எனைத் தடுத்த நிலை.

மெளனித்தேன். அவர் தொடர்ந்தார்:

" நாடிலெழுத் தாறும் நடுவெழுத் தீரைந்தும்
ஓடி னொருபதினா லாகுமே ‍ = ஓடாய் நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோ டுறங்கி நெஞ்சே
ஓரெழுத்தி லேசென் றுரை."

(அகரம் ஆரம்பித்த பாடங்களை ஏன் படிக்கவில்லை என்கிறாரோ ? )

" ஓரெழுத்தா ? "
"ஆம்."
" அதை எங்கே சொல்லித்தருவார்கள் ?"
"எங்கேயும் இல்லை ."
' அப்ப நான் முத்தி எப்படித்தான் பெறுவது " ஒரு விரக்தியுடன் கேட்டேன்.
அவர் பதில் சொன்னார்: சும்மா இரு.

எனக்கு புரிவது போல இருந்தது.
எண்ணங்களை ஒடுக்கினாலன்றி தெளிவு ஏற்படாது. ஆகவே மனதைக் கட்டுக்கொள் கொண்டு வா.
மனம் அமைதியுறும் போது இலக்கு நன்றாகத்தெரியும் எனச்சொல்கிறார்.
என்னால் முடியும் என்று தோன்றவில்லை.
நான் சொன்னேன்: அய்யா ! என்னால் சும்மா இருக்க முடியலையே !

"எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு." சொல்றாருல்லே வள்ளுவரு, அது போல‌
இருந்துட்டுபோ அப்படின்னு சொல்றீகளோ ?

" இல்லை.
"சஞ்சலம் அற்று எல்லாம் நீ தான் என்று உணர்ந்தேன் என்
அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே " ... தாயுமானவர் சொல்வார் இல்லையா ?
அது போல் "எல்லாமே நீதான் என்று உணர்" என்றார்."

" அந்த ' நீ ' யாருங்க அய்யா ?
" அது நீ தான் "
" நான் நீ எனக்குறிப்பிட்டது அவனை.
நீங்கள் ' நீ ' எனக்குறிப்பிடுவது என்னையல்லவா ?"
" இந்த இரண்டுமே ஒன்று தான் . "

அதே சஞ்சலம்.

ஆனாலும் புரிகிறாற்போல் தோன்றியது.

"அய்யா" என்று அழைத்தேன். "இங்கேதான் இருக்கிறேன்.சொல்" என்றார்.
" நான் இத்தனை மறை படித்திருக்கிறேன். ! எவ்வளவு பாசுரங்கள்
ஓயாது ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் சொல்லுகிறேன் !
இவ்வளவு படித்த எனக்குத் தெரியாத உண்மை அந்த மாடு மேய்த்த‌
சத்யகாமனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது ?"

"அவன் ஒருவனைப் பிடித்துக்கொண்டான். அவன் வழி நடந்தான்."

"அந்த ஒருவன் யார் ? பிரும்மனா ?"

" இல்லை . பிரும்மனை அறியும் வித்தையைக் கற்பிக்கும் ஆசான்."

" எங்கே இருக்கிறார் ?"

மனமே தேடு ,உன் உள் இருக்கும் புதையலை தேடு ...... அது தான் பிரம்மம்.
எது உண்மை, பிரம்மம் எது - நாமே பிரம்மம் என்பதை அறிவோமா நண்பர்களே !!!!

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி
என்னுடைய கட உபநிஷத் தொடர் பதிவின் சார்ந்ததாக இந்த தனி பதிவு இடுகின்றேன்..எது நிலை ஆனது , எதுவுமே நிலை ஆனது அல்ல. எது பெரியது , எதுவும் பெரியது அல்ல.நிலை இல்லாதை தேடி , நினைத்து , நினைத்து நாம் ஓடி கொண்டு இருகின்றோம் என்பதே உண்மை..வரும் போது தனியாக வந்தாய் எதையும் எடுத்து வரவில்லை , போகும் போது தனியாக தான் போக போகிறாய், எதையும் கொண்டு போக போவதில்லை .சிறிய கவிதை, பெரிய விஷயம் என்று கூறுவார்கள் . என்ன என்பதை பார்ப்போமா :-

பண்டைய இந்தியாவில் அனைத்து நூல்களையும் பெரும்பாலும் கவிதை வடிவில் எழுதும் வழக்கம் இருந்தது. உதாரணத்திற்கு மனுதர்ம சாஸ்திரம், பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டலாம். மேலும் கணித சாஸ்திரம், வான சாஸ்திரம் மற்றும் கட்டடக் கலையை வர்ணிக்கும் ஆகம சாஸ்திர நூல்களும் கவிதை வடிவில் எழுதப்பட்டிருக்கின்றன. தத்துவ விஷயங்களை எடுத்துரைக்கும் பல நூல்களும் அவ்வாறே கவிதை வடிவில் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கட உபநிஷத், ஸ்வேதாஸ்வதர உபநிஷத் போன்ற நூல்களும் அப்படியே செய்யுள் வடிவில் அமைந்திருக்கின்றன. ஸ்ரீசங்கராசாரியாள் விவேக சூடாமணி போன்ற பல நூல்களை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இம்மாதிரியான நூல்களில் சிறிய உவமைகள், திருஷ்டாந்தம் போன்ற கவிதை நயங்களைக் கொண்டு அவற்றின் மூலம் மிகப்பெரிய தத்துவங்களை விளக்கும் முறை கையாளப்பட்டது. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

நாம்தான் பிரம்மம் என்று கூறுகிறது அத்வைதம். நாமே பிரம்மம் என்றால் அதனை நம்மால் ஏன் அறியமுடிவதில்லை. பிரம்மம் என்பது அறியக்கூடிய வஸ்து அல்ல. அது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஒன்று. அது எப்படி அறியப்படும் பொருளாக முடியும்? மற்ற பொருள்களுக்கு இனிப்பு சேர்க்க சர்க்கரை சேர்க்கிறோம். சர்க்கரைக்கே இனிப்பு ஊட்ட வேறு எதையாவது சேர்க்க வேண்டுமா என்ன? மெழுகுவர்த்தியை ஏற்றி சூரியனைப் பார்க்க வேண்டுமா என்ன? எல்லாவற்றையும் ஒளி ஊட்டக்கூடியது சூரியன். நமக்கு இரவு, பகல் உண்டு. சூரியனுக்கு இரவு உண்டா என்ன? அது எப்பொழுதும் ஒளி மயமானது. அது போல பிரம்மம் அறிந்தது அறியாதது என்ற நிலைகளுக்கு அப்பாற்பட்டது. இப்படி பிரம்மத்தின் தத்துவத்தை கவிதை நயத்துடன் விளக்குகிறார் ஸ்ரீசங்கரர் தன் உபதேசஸாஹஸ்ரி என்ற நூலில்.

நாஹோராத்ரே யதாஸூர்யே ப்ரபாரூபாவிசேஷத: |
போதரூபாத் விசேஷாத் ந போதாபோதௌ ததாத்மனீ ||
இதே கருத்தைத்தான் கடோபநிஷத் இவ்வாறு கூறுகிறது.

அசப்தமஸ்பர்சமரூபமவ்யயம் ததாரஸந்தித்ய மகந்தவச்சயத் |
அநாத்யநந்தம் மஹத: பரந்த்ருவம் நிசாப்ய தந்ம்ருத்யுமுகான்முச்யதே ||

பரப்பிரம்மமானது சப்தம் ஸ்பர்சம், உருவம், சுவை, வாசனை ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்ப்பட்டது. அது மாறுதலற்றது. அதற்கு ஆரம்பமும் கிடையாது; முடிவும் கிடையாது. எல்லா உற்பத்திக்கும் காரணமான ‘மஹத்’ தத்துவத்திலிருந்தும் அப்பாற்பட்டது பிரம்மம். இதனை அறிந்தவன் மரணத்தை வென்றவனாகிறான்.

வித்யாரண்யர் பஞ்சதஸி என்ற நூலில் கூறுகிறார்.

ந்ருத்யசாலாஸ்திதோ தீப: ப்ரபும் ஸப்யாம்ஸ்ச நர்தகீம் |
தீபயேதவிசேஷேண ததபாவே%பி தீப்யதே ||

ஓர் அரங்கத்தின் விளக்கு ஒரு பிரபுவுக்கோ, மற்றவர்களுக்கோ, நாட்டியமாடும் பெண்மணிக்கோ, சமமான முறையில் ஒளி கொடுக்குத் அரங்கத்தில் யாருமே இல்லையென்றாலும் அது ஒளி வீசக்கொண்டிருக்கும். அது போல பிரம்மம் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

உயர உயரப் பறந்த கழுகு பிறகு அலுத்துக் களைத்து தன் இருப்பிடத்திற்குத் திரும்பும். அதுபோல பல்வேறு விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி அலுத்துப்போன ஆத்மா பிறகு தனக்குள்ளே அடங்கும் என்கிறது ப்ருஹதாரண்யக உபநிஷத்.

நீரில் கரைந்திருக்கும் உப்பை கண்ணால் அறியமுடியுமோ? நாவினால் சுவைத்துத்தான் அறிய முடியும். அதுபோல் ஹ்ருதயத்தின் உள்ளே ஒளி வீசிக்கொண்டிருக்கும் பிரம்மத்தை ஐம்புலன்களால் அறிய முடியுமோ? புலன்களை அடக்கி ஞானத்தாலேதான் அறிய முடியும் என்கிறது ஸ்வாராஜ்ய சித்தி என்ற நூல் (ஆசிரியர்: கங்காதரேந்த்ர ஸரஸ்வதி)

மோக்ஷம் என்ற மாளிகை வாசலில் நான்கு காவலாளிகள் காத்து நிற்கிறார்கள். அவர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது. அவர்கள் யார்? 1.மனவடக்கம், 2.ஆத்மவிசாரம், 3.போதுமென்ற மனம், 4.நல்லோர் சேர்க்கை.

மோக்ஷத்வாரே த்வாரபாலாஸ்சத்வார: பரிகீர்திதா: |
சமோ விசார: ஸந்தோஷச்சதர்த: ஸாதுஸங்கம: ||

என்கிறது யோக வாசிஷ்டம். அது மேலும் கூறுவதாவது எப்படி தனக்கு இடப்பட்ட வலையை உதறிவிட்டு சிங்கம் சீறிப் பாய்ந்து செல்லுமோ, அதுபோல் நல்லொழுக்கமுள்ளவன் இவ்வுலகத்து மோகங்களிலிருந்து விடுபட்டு பிரம்ம ஞானத்தை நாடுவான்.

தன்முன் வைக்கப்பட்டிருக்கும் களிமண் உருண்டைக்கு, புத்தகங்கள் ஏதாவது அறிவை ஊட்டமுடியுமா? அறியாமையில் ஆழ்ந்திருக்கும் ஒருவனுக்கு ஆத்ம ஞானத்தை போதித்து தான் என்ன பயன்?

போதே (அ) ப்யநுபவோ யஸ்ய ந கதஞ்சனஜாயதே |
தம் கதம் போதயேச்சாஸ்த்ரம் லோஷ்டம் நரஸமாக்ருதிம் ||
என்கிறது நைஷ்கர்ம்ய சித்தி என்ற நூல் (ஆசிரியர்: சுரேஸ்வராசார்யர்)

ஸ்ரீசங்கரர் கூறுகிறார். மனிதன் நடந்தால் மண்ணில் அவன் பாதம் பதியும். ஆனால் மீன்கள் போகும்போது தண்ணீரில் எதுவும் பதிவதில்லை. பறவைகள் பறக்கும்போது ஆகாயத்தில் எந்தப் பதிவும் ஏற்படுவதில்லை. அது போல் ஞானிகள் செல்லும் பாதையை அறிய முடியாது; சாதாரண மனிதனால்.

தூய்மையான கண்ணாடியில் முகம் பளிச்சென்று தெரியும். அதுபோல தூய்மையான ஆத்மா பிரதிபலிக்கும் என்கிறது ஆத்ம புராணம்.

அக்ஞஸ்ச அஸ்ரத்ததானஸ்ச ஸம்சயாத்மா விநச்யதி |
நாயம் லோகோ%ஸ்தி நபரோ நஸுகம் ஸம்சயாத்மன: ||
என்கிறது பகவத் கீதை.

அறியாமையில் ஆழ்ந்திருப்பவனும், சிரத்தை அற்றவனும், சந்தேகம் கொண்டவனும் அழிகிறான். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவனுக்கு இம்மையும் கிடையாது; மறுமையும் கிடையாது; அகமும் கிடையாது.

பல பெயர் கொண்ட நதிகள் பல வழிகளில் சென்று, பல வண்ணங்களைக் கொண்டு, இறுதியில் கடலில் கலந்து தங்கள் பெயர்களையும், வண்ணங்களையும் இழக்கின்றன. அதுபோல ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாவில் கலந்து தன் தனித்தன்மையை இழந்து ஆத்மாவோடு ஒன்றிவிடுகிறான் என்கிறது ப்ரச்னோபநிஷத்.

எள்ளில் எண்ணெய் இருப்பது போலும், பாலில் வெண்ணெய் இருப்பது போலும், நதியில் தண்ணீர் இருப்பது போலும், அரணக் கட்டையில் நெருப்பு இருப்பது போலும், தன்னுள்ளே இருக்கும் ஆத்மாவை உணர்கிறான் ஞானி என்கிறது ஸ்வேதாஸ்வதர உபநிஷத்.

திலேஷு தைலம் தததீவ ஸர்பி: ஆப: ஸ்ரோத ஸ்வரணீஷு சாக்நி: |
ஏவமாத்மனி க்ருஹ்யதே(அ)ஸௌ ஸத்யேனைனம் தபஸா ஸோ(அ)னுபச்யதி ||

மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை
என்பது சித்தரின் கூற்று. இதே கருத்தை யோக வாசிஷ்டத்திலும் காணலாம்.

யதா ஸ்தம்பே புத்ரிகாந்தஸ்தஸ்யா: ஸ்வாங்கேஷு புத்ரிகா |
தஸ்யாஸ்ச புத்ரிகாஸ்த்யங்கே ததா த்ரைலோக்யபுத்ரிகா ||

மரத்தில் அதில் செதுக்கக்கூடிய உருவம் மறைந்திருக்கிறது. ஒரு பதுமையின் அழகு அதன் ஒவ்வோர் அங்கத்திலும் மறைந்திருக்கிறது. அதுபோல் மூவ்வுலகத்தையும் ஆட்கொள்ளும் பரப்பிரம்மம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் மறைந்திருக்கிறது.

அங்கங்கள் அற்றது பரப்பிரம்மம். அந்த பரப்பிரம்மத்திலிருந்து, அங்கங்களைக் கொண்ட இவ்வுலகம் எப்படி உண்டாகிறது? இதற்குப் பதில் அளிக்க மூன்று திருஷ்டாந்தங்களைக் கையாளுகிறது மூண்டக உபநிஷத்.

எப்படி சிலந்தி தனக்குத்தானே வலை பின்னிக்கொண்டு அதனுள் வசிக்குமோ, பிறகு தனக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்போது அவ்வலையிலிருந்து வெளிப்படுகிறதோ அதுபோல் பிரம்மமும் இவ்வுலகமாகப் பிரதிபலிக்கும்.

எப்படி செடிகொடிகள் தாமே பூமியில் தோன்றுகின்றனவோ, எப்படி உயிருள்ள மனிதனிடமிருந்து உயிரற்ற முடி, நகம் ஆகியவை உற்பத்தியாகின்றனவோ அதுபோல ‘ஸத்’தான பிரம்மத்திலிருந்து ‘ஸதஸத்’ விலக்ஷணமான இப்பிரபஞ்சம் தோன்றுகிறது.

யதோர்ணநாபி: ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச
யதா ப்ருதிவ்யாமோஷதய: ஸம்பவந்தி |
யதா ஸத: புருஷாத் கேசலோமாநி
ததா(அ)க்ஷராத் ஸம்பவந்தீஹ விச்வம் ||

பிரம்மம் ‘ஸத்’ஸ்வரூபம். அதாவது ‘எப்பொழுதும் இருத்தல்’ என்ற நிலை, அழிவற்ற நிலை, அது ஒன்றுக்குத்தான் உண்டு. நாம் சில வருடங்கள் இருக்கிறோம், பிறகு மறைகிறோம். நமக்கு பல்வேறு அறிவு உண்டு. ஆனால் அவை எல்லாம் ஒரு வரையறைக்குள் அடங்கிவிடும். எல்லாம் அறிந்த மனிதன் எவனும் கிடையாது. சிலது தெரியும்; பலது த்தெரியாது. ஐசக் நியூடன் மிகச் சிறந்த விஞ்ஞானி. ஆப்பிள் மரத்திலிருந்து விழுவதைப் பார்த்து புவிஈர்ப்புச் சக்தியைக் கண்டறிந்தார். கால்குலஸ் என்ற கணித முறையைக் கண்டுபிடித்தார். அவர் ஒரு பூனையை அன்புடன் வளர்த்து வந்தார். எப்பொழுதும் கதவைத் தாளிட்டுக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அவர், அந்தப் பூனை மட்டும் தன் அறைக்குள் வேண்டும்பொழுது வந்து போவதற்காக சுவரில் ஒரு ஓட்டையைப் போட்டு வைத்தார். பிறகு அந்தப் பூனை குட்டி போட்டவுடன் அது வருவதற்காக இன்னொரு சிறிய ஓட்டை போட்டார். ஏன் தாய்ப் பூனை வரும் வழியாகவே குட்டிப்பூனை வரமுடியாதோ? அவ்வளவு பெரிய அறிவாளியான நியூட்டனுக்கு இந்தச் சிறிய விஷயம் தோன்றவில்லை. எனவே எல்லாம் அறிந்த மனிதனைப் பார்க்கவே முடியாது. எல்லாம் அறிந்த நிலை பரமாத்மாவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனெனில் அது “சித்” ஸ்வரூபம். நாம் எல்லாம் இவ்வுலகில் சிறுசிறு இன்பங்களை அனுபவிக்கிறோம். ஆனால் கூடவே துன்பமும் வந்து தொலைக்கிறது. துன்பம் கலக்காத இன்பத்தை யாரும் அடைய முடியாது. ஆனால் பிரம்மமானது முழு ஆனந்த நிலையில் இருப்பது +தூஜ்தூஜ்ஸீனதூஐ ¥தூளுஐண்வீதூ டுªதூக்ஷிதூதூஜ்தூதூவீதூனு** ஆநந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத் || என்கிறது உபநிஷத். பிரம்மம், இவ்வாறு, சத், சித், ஆனந்த ஸ்வரூபமானது இம்மூன்று சொற்றொடர்களைச் சேர்த்தால் சச்சிதானந்தம் ஆகிறது. அதுவே பிரம்மம். அது மாயையின் உதவியால் பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்து தானே கட்டுப்படுகிறது. பிறகு அதை உதறிவிட்டு தானே தன்னுள் நிலைக்கிறது.

பிரம்மம் ‘ஸத்’ ஆனது. ‘ஸத்’ என்ற பதத்திற்கு எதிர்மறை ‘அஸத்’. யரும் அறியாத ஒன்றுதான் ‘அஸத்’ என்பது. உதாரணம் முயல் கொம்பு; அதை யாராவது பார்த்ததுண்டா? கிடையாது. அப்படியானால் இப்பிரபஞ்சம் ‘ஸத்’ஆ? அல்லது ‘அஸத்’ ஆ? இப்பிரபஞ்சம் பிரம்மம் போன்று நிலையானது அல்ல. அழியக்கூடியது. எனவே அதனை ‘ஸத்’ என்று சொல்லமுடியாது. அப்படியானால் அதனை ‘அஸத்’ எனலாமா? முடியாது? இவ்வுலகத்தில் இவ்வளவு பொருள்கள் இருக்கின்றன. எவ்வளவு அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் முயல் கொம்பு போன்று ‘அஸத்’ என்று ஒதுக்கிவிடமுடியுமா? எனவே உண்மை என்னவென்றால் இப்பிரபஞ்சம் ‘ஸத்’தும் இல்லை ‘அஸத்தும்’ இல்லை; ‘ஸதஸத் விலக்ஷணம்’

இவ்வுடலை நிலையானதாக எண்ணுபவன் பரப்பிரம்மத்தை அறிய முடியுமோ? அது முதலையை மரக்கட்டை என்று எண்ணி அதன் மேல் ஏறி நதியைக் கடக்க முயல்வது போல என்கிறார் ஸ்ரீசங்கரர் தன் விவேகசூடாமணியில்.

சரீர போஷணார்தே ஸந் ய ஆத்மாநம் தித்ருக்ஷதி |
க்ராஹம் தாருதியா த்ருத்வா நதீம் தர்தும் ஸ கச்சதி ||
இந்நூல் மேலும் கூறுவதாவது.

மாயையில் ஆழ்ந்திருக்கும் நாம் அதனை அறிவது மிகவும் கடினம். எப்படி ஒரு விலைமாது தன் வாடிக்கையாளரின் அறிவை மயக்கி தன் வலையில் விழுமாறு செய்கிறாளோ அதுபோல் இவ்வுலக ஆசை என்ற மாயை நம் கண்களையும் அறிவையும் மறைக்கிறது. பாசியை எவ்வளவு தான் தள்ளிவிட்டாலும் அது மறுபடியும் குளத்து நீரில் பரவி நிற்கும். அதுபோல் நாம் எவ்வளவு தான் உதறிவிட்டாலும் மாயை மறுபடியும் நம்மை வசப்படுத்தி விடுகிறது.

ஒரே பெண் ஒருவருக்கு மனைவி மற்றொருவருக்குத் தாய், மற்றும் கொழுந்தி, மாமி, சித்தி, பெரியம்மா, மருமகள் போன்று பல உறவுகளை அடைகிறாள். அதுபோல் ஒரே பிரம்மம் பிரபஞ்சத்தின் பல வடிவங்களாகப் பிரதிபலிக்கிறது (பஞ்சதசி)

மண்ணைக் கொண்டு பல உருவங்களைப் படைக்கலாம். ஒருவன் மண்ணைக் கொண்டு பிள்ளையார் பிடிக்கலாம். மற்றவன் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடியலாம். எப்படியோ ஒரு உருவம் கிடைத்தது. எல்லாம் கடைசியில் மண்தான். பேதம் கிடையாது. அதுபோல்தான் இப்பிரபஞ்சம் முழுவதும் பிரம்ம ஸ்வரூபம்தான். பேதம் கிடையாது என்கிறார் கௌடபாதர். இவர் ஸ்ரீசங்கரரின் பரமகுரு. ஸ்ரீசங்கரரின் குருவான கோவிந்தபாதரின் குரு ஸ்ரீகௌடபாதர்.

ம்ருல்லோத்ருவிஸ்புலிங்காத்யை: ஸ்ருஷ்டிர்யா சோதிதான்யதா |
உபாய: ஸோ(அ)வதாராய நாஸ்தி பேத: கதஞ்சன ||

பல பக்தர்களுக்கு காசிக்குப் போய் கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்து புண்ணியத்தை அடைய வேண்டும் என்ற ஆவல் இருக்கலாம். ஆனால் காசிக்குப் போவதற்கு உடல் ஒத்துழைக்காமல் இருக்கலாம். பணவசதி இல்லாமல் இருக்கலாம். கவலையை விடுங்கள் என்கிறார் ஸ்ரீசங்கரர். இவ்வுடலே காசி. நம்முன் ஓடும் ஞானமே கங்கை நதி. பக்தி தான் கயை. நல்லதோர் ஆசானின் பாதங்களைப் பணிதலே பிரயாகை. நம்முன் உறையும் அந்தராத்மாவே விஸ்வேஸ்வரர். எல்லாம் நம்முள்ளேயே இருக்கையில், இதைவிடச் சிறந்த புண்ய க்ஷேத்ரம் எது?

காசீக்ஷேத்ரம் சரீரம் த்ரிபுவனஜடரே வ்யாபினீ ஞானகங்கா
பக்தி: ச்ரத்தா கயேயம் நிஜகுருசரணத்யானயோக: ப்ரயோக: |
விச்வேசோ(அ)யம் துரீய: ஸகலஜன்மன: ஸாக்ஷிபூதோ(அ)ந்தராத்மா
தேஹே ஸர்வம் மதீயே யதி வஸதி புனஸ்தீர்தமன்யத் கிமஸ்தி ||
(காசீபஞ்சகம்)

வேடுவன் மானைப்பிடிக்க ஒரு கொம்பு வாத்தியத்தை ஊதுவான். அதன் ஓசைக்கு மயங்கி மான் வலையில் மாட்டிக்கொள்ளும். ஒரு ஆண் யானையைப் பிடிக்க பெண் யானையை உபயோகப்படுத்துவார்கள். விட்டில் பூச்சி நெருப்பின் வண்ணத்துக்கு மயங்கி அதில் விழுந்து சாகும். மீன் குச்சியில் சொருகப்பட்டிருக்கும் புழுவுக்கு ஆசைப்பட்டு மாட்டிக் கொள்ளும். வண்டு மலரின் வாசனைக்கு மயங்கும். இவை ஒவ்வொரு புலனை ஈர்க்கும் பொருளுக்கு ஆசைப்பட்டுத் தங்களையே இழக்கின்றன. மனிதனோ ஐம்புலன்களின் ஈர்ப்புக்கும் அடிமை ஆகிறான் என்கிறது பாகவதம்.

குரங்கமாதங்க பதங்கமீன ப்ருங்கேதா: பஞ்சபிரேவ பஞ்ச |
ஏக: ப்ரமாதீ ஸகதம் ந ஹன்யதே ய: ஸேவதே பஞ்சபிரேவ பஞ்ச ||

பணம் ஒரு மனிதனை என்ன பாடுபடுத்தும் என்று விளக்குகிறது யோகவாஸிஷ்டம். பணம் மனத்தை மயக்குகிறது. நற்குணங்களை வெட்டிவிடும். துக்கம் என்ற வலையை விரிக்கிறது. உறவில் விரிசலை ஏற்படுத்தும். சலசலவென்று ஓடும் நீர் எப்படி பனியால் இறுகிவிடுமோ, அதுபோல் நல்ல மனிதனின் உள்ளமும் பணத்தால் இறுகிவிடும்.

மோஹயந்தி மனோவ்ருத்திம் கண்டயந்தி குணாவலிம் |
து: கஜாலம் ப்ரயச்சந்தி விப்ரலம்பபரா: ஸ்ரிய: ||
தாமச்சீதம்ருதுஸ்பர்ச: பரேஸ்வே ச ஜனே ஜன: |
வாத்யயேவ ஹிமம் யாவச்ச்ரியா ந பருஷீக்ருத: ||

சாதாரணமாக பிறவியைக் கடக்க முடியாத கடல் என்பார்கள். பிறவா வரம் வேண்டும் என்று ப்ரார்த்திப்பார்கள். ஆனால் யோக வாசிஷ்டம் கூறுவது என்னவென்றால் பிறவியை வெறுக்காதே உடலைத் தூற்றாதே என்கிறது. பிறவி இல்லாவிட்டால் பரமாத்மாவை த்யானிப்பது எப்படி? அந்த த்யானத்தால் அன்றோ மோக்ஷத்தை அடைய முடியும். எனவே உடல் என்பது மோக்ஷத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும் கதவு என்கிறது.

மோக்ஷம் அடைய வேண்டும் என்ற அவா ஒரு நதி போன்றது. அந்த நதி மன உளைச்சல்கள் என்ற ஜலப்பிரவாகத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஆசை என்ற பேரலைகள் நம்மைத் தடுக்கின்றன. பற்று என்ற முதலைகள் பயமுறுத்துகின்றன. வாதங்கள் என்ற பறவைகள் குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருக்கின்றன. நம் தைர்யம் என்ற மரம் அடித்துச் செல்லப்படுகிறது. மோஹம் என்ற சுழல்கள் வேறு அச்சுறுத்துகின்றன. ஆதங்கம் என்ற உயர்ந்த கரைகள் வேறு தடுக்கின்றன. ஆனால் யோகிகளின் இருதயங்கள் இவ்வளவு தடைகளையும் கடந்து அக்கரையை அடைந்து ஆனந்தமடைகின்றன.

ஆசா நாம நதீ மனோரதஜலீ த்ருஷ்ணாதரங்ககுலா |
ராகக்ராஹவதீ விதர்கவிஹகா தைர்யத்ருமத்வம்ஸினீ |
மோஹாவர்தஸுதுஸ்தராதிகஹனா ப்ரோத்துங்கசிந்தாதடீ
தஸ்யா: பாரகதா விசுத்தமனஸோ நந்தந்துயோகீச்வரா: ||
பர்த்ருஹரியின் வைராக்ய சதகம்

சாத்திரங்களைக் கற்றும் அவற்றின் உட்பொருளை அறிந்து, பின்பற்றாதவனுக்கு சாத்திரங்களினால் என்ன பயன்? அவை அவனுக்கு ஒரு சுமைதான். சந்தனக்கட்டைகளை சுமந்து செல்லும் கழுதை தன் சுமையைத்தான் நினைக்குமே தவிர சந்தனத்தின் நறுமணத்தையா உணரப்போகிறது?

யதா கரச்சந்தனபாரவாஹீ பாரஸ்ய வேத்தா ந து சந்தனஸ்ய |
ததைவ சாஸ்த்ராணி பஹூன்யதீத்ய ஸாரான்னஜாநந் கரவத்வதேத்ஸ: ||
(உத்தரகீதை)

இதே கருத்தை,

ஸ்தாணுரயம் பாரஹார: யோ அதீத்ய வதம் யோ விஜாநாதி நஅர்தம் ||

என்ற வரிகளும் உணர்த்துகின்றன. வேதம் படித்து அதன் பொருளை உணராதவன் சுமைதாங்கிக் கல் போன்றவனாகும்.

சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். சங்கரர் மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். பிரம்மம் உலகாகவும், ஆன்மாவாகவும் தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.

மாயை.
மா = ஒடுங்குதல்
யா = விரிதல்
மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோண்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும்.

பிரம்மத்தின் ஒரு சிறு அம்சமே மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் முக்குணங்களுடன் விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட) ஐந்து பூதங்களை தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோன்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில் அழிவுக்கு உட்பட்டதுதான். ஊழிக்காலத்தில் இவையெல்லாம் பிரம்மத்திடம் ஒன்றித்துவிடும். பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.

எனவே மாயையில் இருந்து விடுபட்டு பிரம்மத்தை அறிவோம் நண்பர்களே.